×

சிறுகதை-குற்றம்!

நன்றி குங்குமம் தோழி

‘‘ஹேய் ஹேமா…” உற்சாகமான குரல் கேட்டு திரும்பிப் பார்த்தாள் ஹேமா.ஒரு இளைஞன் புன்னகையோடு நின்றிருந்தான். அந்த இளைஞன் சற்று உயரமாக இருந்தான். டிரிம் பண்ணிய தாடியுடன், இடது கையில் சிங்கிள் பேங்கிள், இடது காதில் ஒற்றை கடுக்கண், கலைந்த கேசத்துடன் பார்க்க ஸ்மார்ட்டாக இருந்தான். டைட் ஜீன்ஸ்,
டீஷர்ட்டுடன் இருந்த ஹேமா கையில் ஐஸ்க்ரீம் வைத்திருந்தாள்.‘‘யாரு…?”‘‘என்னை தெரியலை..?’’‘‘நான்தான் பிரவீன்! நம்ம இரண்டு பேரும் ஒரே ஸ்கூலில் படிச்சோமே… நீ பிப்த் ஸ்டாண்டட் படிச்சப்ப நான் செவென்த் படிச்சேன். அப்புறம் நான் வேற ஸ்கூல் மாறிட்டேன்… நியாபகமில்லை…?’’‘‘ஆங்ங்ங்… இப்ப நியாபகம் வந்துடுச்சுடா… நீ கூட என்னை முட்டை கண்ணு ஹேமானு கூப்பிடுவேல… ஆளே மாறிட்ட பிரவீன்… உன்னை சுத்தமா அடையாளம் தெரியலை… நீ எப்படிடா என்னை கண்டுபிடிச்சே…”
‘‘அதே முட்டைக்கண்ணை வெச்சுதான்! நீ இன்னும் அதே அஞ்சாங் கிளாசில்தான் இருக்கீயா..?’’

‘‘நான் இப்போ ப்ளஸ் டூ படிக்கிறேன்டா… டென்த் முடிச்சதும் நான் வேற ஸ்கூல் மாறிட்டேன்டா… நீடா?’’ ‘‘நான்
கே பி ஆர் இன்ஜினியரிங் காலேஜில்…

இ சி இ செகண்ட் இயர் பண்றேன்!”
‘‘வாவ்… சூப்பர்டா!”
‘‘நீ என்ன பண்ணப்போற?”
‘‘மெடிக்கல் லைன் போகணும்னு ஆர்வமா இருக்குடா…”
‘‘பயாலஜி ஸ்டூடெண்ட்டா நீ…?’’

‘‘ஓய்.. என்னடா முகம் சுழிக்கிறே…உனக்கு உடம்பு சரியில்லைன்னா
நீ என்கிட்ட தான்டா வரணும்…’’
‘‘உன்கிட்ட டிரீட்மென்ட் எடுத்துக்கிட்டாலும்…”
இருவரும் சிரித்து பேசியபடி செல்போன் நம்பர்களை ஷேர் பண்ணிக்கொண்டார்கள்.ஹேமா வீட்டிற்குள் நுழைந்ததும் சாந்தா அதட்டினாள்.

‘‘ஹேமா, உனக்கு ஆன்லைன் கிளாஸ் இருக்குல… ஏன் எந்திரிச்சு வெளியே போன?”
‘‘பிரேக் டைம் மம்மி! பக்கத்துல இருக்குற சூப்பர் மார்க்கெட்டுக்கு போனேன்… சில்லுனு இரண்டு வெனிலா ஐஸ்க்ரீம் சாப்பிட்டுட்டு வந்தேன்!”
‘‘சரி சரி… கிளாஸ மிஸ் பண்ணாதே!”‘‘ஓகே மம்மி!”ஹேமா செல்போனை எடுத்தாள். இப்போ அவளுக்கு பயாலஜி கிளாஸ். வேணுகோபால் சார் ஆன்லைனில் இருந்தார். ஹேமாவை தவிர மற்ற ஸ்டூடெண்ட்ஸ் இன்னும் ஆஜராகவில்லை. வேணுகோபால் ஹேமாவை பார்த்து சிரித்தார். ஹேமா பதிலுக்கு லேசாக சிரித்தாள். பின் அவரிடம் இருந்து ஒரு மெசேஜ் வந்தது.
‘‘ஈவினிங் பிரீயா ஹேமா? நாம இரண்டு பேரும் சினிமாவுக்கு போவோமா…?’’ எனக் கேட்டார்.

…‘‘நாம அப்புறம் சாட்டிங் பண்ணுவோம் …” என்று சொல்லிவிட்டு கிளாஸை ஆரம்பித்தார்.
ஹேமாவின் உடல் பயத்தால் சில்லிட்டு போனது. முக்கால் மணிநேரம் அவரது கிளாஸை அவளால் கவனிக்க முடியவில்லை. கிளாஸ் முடிந்த அடுத்த நொடி நெட்டை ஆப் பண்ணினாள் ஹேமா. சில நொடிகளில் பிரவீன் போன் பண்ணினான்.

‘‘ஹாய்டா…”
‘‘ஹாய் ஹேமா!”
‘‘சென்னையில் இருக்கிற பெஸ்ட் கோச்சிங் கிளாசஸ் பற்றி வாட்ஸாப்பில் மெசேஜ் பண்ணியிருக்கேன் பாரு… உனக்கு யூஸ்புல்லா இருக்கும்…”
‘‘நெட் ஆன் பண்ணவே பயமாயிருக்குடா…”‘‘ஏன்?”‘‘எங்க பயாலஜி சார், நம்ம இரண்டு பேரும் சினிமாவுக்கு போலாமான்னு என்கிட்ட கேக்குறாரு பிரவீன்…”
‘‘என்ன ஹேமா ஷாக்கிங்கா இருக்கு?ஒரு டீச்சர் ஸ்டூடெண்ட் கிட்ட இப்படியெல்லாமா பேசுறாரு… இக்னோர் ஹிம்…டோன்ட் ரிப்ளை ஹிம்!”
‘‘ஓகே டா..!”ஹேமா நெட்டை ஆன் பண்ணினதும் வாட்ஸாப்பில் வேணுகோபாலின் மெசேஜ்தான் முதலில் இருந்தது.

ஒரு மெசேஜில், ‘‘உங்கிட்ட நிறைய பேசணும் போல் இருக்கு ஹேமா…” என்று அனுப்பி இருந்தார். மற்றொரு மெசேஜில், ‘‘நீ ஸாரியில் ரொம்ப அழகா இருக்கே… உன்னை நான் ஸாரியில் பார்க்கணும்…” என்றிருந்தார். ஹேமா செல்போனை தூக்கிப்போட்டாள். அவள் உடல் முழுவதும் கம்பிளி பூச்சி ஊர்வதுபோல் இருந்தது. கூடவே
அழுகையும் வந்தது.

பிரவீனிடமிருந்து போன் வந்தது. எக்கி செல்போனை எடுத்து அவன் காலுக்கு
ஆன்ஸர் பண்ணினாள் ஹேமா.‘‘நான் அனுப்பின மெஸேஜ் பார்த்தியா ஹேமா?”
‘‘இல்லடா!”‘‘ஏன்?”
‘‘அந்த சார் என்னென்னமோ மெஸேஜ் பண்றாரு பிரவீன்… எனக்கு ரொம்ப பயமா இருக்குடா…”

அவர் என்ன மெஸேஜ் அனுப்பினார் என்பதை பிரவீனிடம் சொன்னாள் ஹேமா.‘‘ஒரு வயசுல மூத்தவர் பொண்ணுங்ககிட்ட இவ்ளோ கீழ்த்தரமாவா நடந்துப்பார்… இதை சும்மா விடக்கூடாது ஹேமா. போலீஸில் கம்ப்ளைன்ட் பண்ணி ஆக் ஷன் எடுத்தாகணும்…”‘‘வேண்டாம் பிரவீன்! பயமா இருக்கு!”‘‘இதை இப்படியே விட்டா அந்த ஆளு ஆட்டம் ஜாஸ்தியாயிடும். நாளைக்கே நாம பக்கத்துல இருக்கிற போலீஸ் ஸ்டேஷனில் போய் கம்ப்ளைன்ட் கொடுப்போம்!” மறுநாள் பிரவீனும் ஹேமாவும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார்கள். இன்ஸ்பெக்டர் ஹரி இருவரையும் நிமிர்ந்து பார்த்தார்.‘‘சார், ஒரு கம்ப்ளைன்ட் கொடுக்கணும்!”‘‘என்ன கம்ப்ளைன்ட்?”‘‘எங்க பயாலஜி சார் ஆன்லைன் கிளாஸ் எடுக்கும்போது எனக்கு மெஸேஜ் அனுப்புறாரு… இதனால எனக்கு ஒரே மனஉளைச்சலா இருக்கு…”

‘‘இது தப்பாச்சேம்மா! ஒரு வாத்தியார் சின்ன பொண்ணுகிட்ட இப்படி நடந்துக்க எப்படித்தான் மனசு வருதோ…”‘‘பயமா இருக்கு சார்… படபடப்பா இருக்கு…”‘‘பயப்படாதேம்மா… அவரை நாங்க பார்த்துக்கிறோம்… ஒரு கம்ப்ளைன்ட் எழுதி கொடுத்துட்டு போங்க… மத்ததை நாங்க பார்த்துக்கிறோம்!”ஹேமா கைகள் நடுங்க கம்ப்ளைன்டை எழுதிக்கொடுத்தாள். செல்போனை நோண்டிக் கொண்டிருந்த பிரவீனை நிமிர்ந்து பார்த்தாள். பிரவீன் ஹரியிடம் சொன்னான்.

‘‘சார் ஒரு சின்ன ரெக்வஸ்ட்… ஹேமா பெயர் வெளியே வரவேண்டாம்.”‘‘ஸுயர் ஸுயர்!”காந்திபுரம் எக்ஸ்டென்ஷனில் கடைசியில் கொஞ்சம் ஆடம்பரமாய் இருந்தது வேணுகோபாலின் வீடு. நிறைய க்ரோட்டன்ஸ் செடிகளுடன் புத்துணர்ச்சியாய் தெரிந்தது. அவர் வீட்டுக்கு முன்பாக ஜீப்பை நிறுத்திவிட்டு இன்ஸ்பெக்டர் ஹரியும்அவருடன் இரண்டு கான்ஸ்டபிள்களும் உள்ளே நுழைந்தார்கள்.வேணுகோபால் எம்.எஸ்.சி, பிஎட்,எம்எட் என்று தங்க நிறத்திலான பலகையில் அவர் பெயரும் அவர் படித்து வாங்கின டிகிரியும் எழுதி இருந்தது.

வேணுகோபால் டிவியில் ஆன்மீகம் பார்த்துக்கொண்டிருந்தார். மாநிறத்தில் ஒடிசலான தேகம். நெற்றியில் விபூதிக் கீற்று…அவர் மனைவி சூடான டீயை அவர் முன்பு வைத்துவிட்டு நகர முயன்றபோது அழைப்பு மணி அழைத்தது.இன்ஸ்பெக்டர் ஹரியை பார்த்ததும் வேணுகோபால் மெல்ல எழுந்து நின்றார்.
‘‘எஸ்..!”

‘‘நான் இன்ஸ்பெக்டர்
ஹரி, ஒரு என்கொயரிக்காக
வந்திருக்கோம்!”
கனகாவிடம் நாற்காலியை போடச்சொன்னார். ஹரி
நாற்காலியில் உட்கார்ந்தார்.
‘‘நீங்கதான் வேணு
கோபாலா?”
‘‘எஸ்..!”

‘‘நீங்க எந்த ஸ்கூலில் ஒர்க்
பண்றீங்க..?”
‘‘வித்யா ஸ்கூலில் பயாலஜி
டீச்சரா ஒர்க் பண்றேன்!”
‘‘உங்க வகுப்பு மாணவிகளிடம் உங்கள் நடத்தை எப்படி
இருக்கும்?”
கனகா பதட்டமானாள்.

‘‘என்னங்க, என்னென்னமோ கேட்கிறார்… இதோ பாருங்க இன்ஸ்பெக்டர் என் கணவருக்கு அந்த மாதிரி கெட்ட புத்தி எல்லாம் கிடையாது…”
‘‘அப்படினு நீங்க நினைச்சுக்கிட்டு இருக்கீங்க… உங்க புருஷன் ஆன்லைன் கிளாஸ் எடுக்கும் போது ப்ளஸ் டூ மாணவியிடம் தகாத மெஸேஜ் அனுப்பி தொல்லை கொடுத்திருக்கார்!”
‘‘நோ இன்ஸ்பெக்டர், அந்த மாதிரி நான் என்னிக்கும் நடந்துகிட்டதில்லை…என் பெயரை வேண்டுமென்றே கெடுப்பதற்காக யாரோ பொய்யான தகவலை பரப்பியிருக்காங்க…” என்றார் வேணுகோபால் கோபமாக.

‘‘உங்க பள்ளி மாணவி சாட்சியோடு உங்க மேல கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க… அதன் அடிப்படையில் நாங்க
உங்களை அரெஸ்ட் பண்ண வந்திருக்கோம்… நடங்க ஸ்டேஷனுக்கு!”
வேணுகோபால் அதிர்ந்தார்.

‘‘இருங்க இன்ஸ்பெக்டர், என் பையனை கூப்பிடுறேன்… அவன் பேசுவான்!”
கீழே சலசலப்பு சத்தம் கேட்டு வேணுகோபாலின் மகன் மாடி அறையில் இருந்து இறங்கி வந்தான். அவன் இன்ஸ்பெக்டர் ஹரியை ஏறிட்டுப் பார்த்தான். நிலவரத்தை புரிந்து அவன் திகைத்துக் கொண்டிருக்கும் போது, இன்ஸ்பெக்டர் ஹரி நக்கலாக சொன்னார்.‘‘பெத்த புள்ளையே அப்பன்காரன் மேல கம்ப்ளைன்ட் கொடுக்கிறதை இப்பதான் பார்க்கிறேன்.வேணுகோபால் தன் பையன் பிரவீனை திரும்பிப் பார்த்தார்.

‘‘அ… அப்பா என் ஸ்கூல் ஃப்ரெண்ட் ஹேமா சொன்னா, எங்க பயாலஜி சார் ஆன்லைன் கிளாஸ் எடுக்கும் போது எனக்கு தகாத மெஸேஜ் அனுப்புறாருனு… அது
நீங்கனு எனக்கு தெரியாதுப்பா… ஸாரி!”இன்ஸ்பெக்டர் ஹரி, வேணுகோபாலையும் பிரவீனையும் மாறி மாறி பார்த்தார். பின் சொன்னார்… ‘‘ஏன்டா, பெத்த அப்பா நீயே பொறுக்கியா இருந்தா உன் புள்ளையும் பொறுக்கியாதான் வளருவான். நாளைக்கே அவன் பண்ற பொறுக்கி தனத்தை நீ கண்டிச்சா அவன் அடங்குவானடா..? ஒரு அப்பன்காரன் புள்ளைக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக இருக்கணும்… இப்படி காறி துப்புற மாதிரி இருக்கக் கூடாது…”வேணுகோபால் தலை கவிழ்ந்திருந்தார்.

தொகுப்பு : அனிதா குமார்

இப்படி செய்யலாம் கேசரி

வீட்டில் திடீர் விருந்தாளி வந்துவிட்டால், நொடியில் செய்யக்கூடிய எளிமையான இனிப்பு வகைதான் கேசரி. ஆனால், அதை செய்வதற்கு பொறுமை மட்டுமில்லை சில யுக்திகளை கையாள வேண்டும்.

*கேசரியில் ஏலக்காயை தூளாக பயன்படுத்துவது நல்லது.
*முதலில் முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து அதே வாணலியில் கேசரி செய்வது சுலபம்.
*கேசரி செய்ய ஆரம்பிப்பதில் இருந்து முடியும்வரை அடுப்பை சிம்மில் வைத்தே சமைக்க வேண்டும்.
*நீங்கள் உபயோகிப்பது வறுத்த ரவையே ஆனாலும் மீண்டும் ஒரு முறை வறுப்பது சிறப்பு.
*அன்னாசி, சப்போட்டா, வாழைப்பழம், செர்ரி போன்ற பழங்கள் சேர்த்தும் கேசரி செய்யலாம்.
*கேசரி கெட்டியாகாமல் இருக்க இரண்டு ஸ்பூன் சமையல் எண்ணெய் கேசரியில் சேர்த்து செய்யலாம்.
*சர்க்கரைக்கு பதில் வெல்லம்/ நாட்டு சர்க்கரை சேர்த்து செய்வது சிறப்பு.
*பொதுவாக சமையலில் செயற்கை நிறமூட்டிகளைச் சேர்க்காதவர்கள் ஒரு சிட்டிகை குங்குமப்பூ சேர்த்து கேசரி செய்யலாம்.
*தண்ணீர் கொதிக்கும்போது அதில் கால் ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு பின் ரவையை சேர்த்து மஞ்சள் நிற கேசரி செய்யலாம். இது மாதிரி பீட்ரூட் சாறு, கேரட் சாறு சேர்த்து நல்ல சத்தான நிறமான கேசரி தயாரிக்கலாம்.

-சுந்தரி காந்தி, சென்னை.

The post சிறுகதை-குற்றம்! appeared first on Dinakaran.

Tags : Hema ,Dinakaran ,
× RELATED உரிமம் ரத்து செய்யப்பட்ட பொருட்களை...